போர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
போர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 23 நவம்பர், 2012

கார்த்திகைப்பூவில் சிரிக்கும் கண்மணிகள்



தாயின் வயிறு விட்டு 
தரணிக்கு வந்த 
தமிழ்த் தாயின் குழந்தைகள் நீங்கள்



தலைவன் அணி சேர்ந்து
தன்னையே தந்து
தமிழினம் காத்த காவல்தெய்வங்கள் நீங்கள்

விண்ணிலும் வென்று மீண்டு
விளையாட்டாய் சமராடி
வியக்க வைத்த வித்தகர்கள் நீங்கள்

கடலிலும் காவியம் படைத்து
கலங்களையும் வென்று
கடலலையென ஆர்ப்பரித்த கற்பூரங்கள் நீங்கள்

தரைவழி வந்த பகைக்கு
தலையிடி கொடுத்து
தம்மையே ஆகுதியாக்கிய தற்கொடையாளிகள் நீங்கள்

கார்த்திகை மாதங்களில் வந்து
கண்விழித்துக் காட்டி 
கார்த்திகைப்பூவில் சிரிக்கும் கண்மணிகள் நீங்கள்.

பாடல்களின்  கருவாகி நின்று
பகையதை ஒடுக்கிய
பண்பாளர்கள் மண்ணில் விதையானமாவீரர்கள் நீங்கள். 
வல்வையூரான் 

செவ்வாய், 25 செப்டம்பர், 2012

தேடல்.

தேடல்கள் நீண்டாலும்
தீர்க்கமாய் முடிவெடுத்து
தேடு பொருளை சரியாய் தெரிந்து 
திசைதனையும் ஆய்ந்து

தேடலை மேற்கொண்டால்
திருப்திதான் திருப்பதி 
தேடுபொருள் கிடைக்கும்
திடமாகத் தான் நம்பு

தொலைத்தவை நிறையத்தான் தமிழன்
தேடத்தான் வேண்டும் தேடு
தொலைத்தது ஒன்றும் தொலைவிலில்லை
தேடத்தான் வேண்டும் தேடு

ஒற்றை காலில் நிற்கும் கொக்கு கூட
தேடித்தான் நிற்கிறது 
ஒற்றுமையாய் தேடிப்பார் 
தேடுபொருள் நிச்சயம் கிடைக்கும்
வல்வையூரான் 

ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

பட்டினி



ஒற்றையடிப் பாதை
கன்னங் கரிய இருட்டு
சில் வண்டின் ரீங்காரம்
உடலை சிலிர்க்க வைக்கும் குளிர்
தூரத்தில் கோட்டானின் கதறல்
பக்கத்தில் இருந்த பதிந்த 
மரக்கிளையில் தொங்கி
விழிகளை உருட்டிய வௌவால்
எதிரே தெரிந்த நிமிர்ந்த மரம் தந்த
ஏகாந்தப் பேயை ஏற்றிடும் தோற்றம்
எதையும் இவன்
இலட்சியம் செய்யவில்லை
இலட்சியம் எல்லாம்
எதிரே தூரத்தில்
ஏதிலியாய் நின்ற ஒற்றைக் குடிசை.

இன்றோ நாளையோ இடிந்து விழுவேன்
என்றே சொல்லிய குடிசை மண் மதில்
அந்த சுவரில் ஊதுபத்தி சூட்டில்
எரிந்தும் எரியாததுமான மங்கலான
கலண்டர் முருகன் படம்
விடிந்தால் சூரியன்
விழுந்தடித்து உள்ளே வரும்
வித்தியாசமான ஓலைக் கூரை
மூலையில் கிடந்த
முழுசாய் கிழிந்த ஓலைப் பாயில்
முழங்கால் முகத்துக்கு நேரே நீட்டி
முழுவட்டமாய் முடங்கியிருந்தாள்
முத்து‘லட்சுமி’ எனும் முதியபாட்டி.

திறந்து கிடந்தது பலகைக் கதவு
பூட்டப்படாமல் இல்லை
பூட்டே இல்லாமல்
உள்ளே இருள் கவிந்து கிடந்தது
ஏற்றப்பட்ட குப்பி விளக்கு
எண்ணை இல்லாது போனதால்
காற்றில் அது கலந்திருந்தது
கருகிய திரி புகையை
அடுப்பில் படுத்திருந்த கருப்பு பூனை
ஆ... என கொட்டாவி விட்டு
மீண்டும் சோம்பலோடு
சாம்பலுக்குள் முடங்கிக் கொண்டது
இரண்டு கப்புகளுக் கிடையில்
கட்டியிருந்த கொடிக்கயிறு
இற்றுப் போனதால்
படாரென அறுந்துபோனது
பரவிக் கிடந்தன பழைய
கிழிந்த புடவைகளும் சாரங்களும்.

அவனுக்குள்ளும் பசிதான்
ஆனாலும் அவன் முன்
அவன் ஆசைப் பாட்டி
ஆச்சுது இன்று மூன்றாம் நாள்
பட்டினியைப் பலமுறை
பார்த்தவர்கள் இவர்கள்
பழகிப் போனது தான் என்றாலும்
பசிக்கிறது என்செய்ய
கொஞ்சம் படிச்சவர் தான் இவர்
கெஞ்சிக் கேட்டும் இவனுக்கு
வேலை ஏனோ கிடைக்கவில்லை
மாரி பொய்த்ததால்
வயலும் இல்லை வாழ்வும் இல்லை
கூலி வேலைக்கு போகலாம் என்றால்
குடிசைகளின் நடுவில் கூலி ஏது
பசிக்குது என்று கையேந்த
பாவி மனம் ஒப்பவில்லை
வசிக்கின்ற வீடும் திருத்தி
வளமாக்க வேண்டும்
புசிக்க நல்லதாய் இருவர்க்கும்
போசனம் வேண்டும்
பாட்டிக்கு ஒரு நல்ல சேலை
வீட்டிற்கு ஒரு நல்ல கூரை
கேட்டது ஒரு வேலை அது இல்லை
போட்டதும் ஒரு வேசமில்லை

ஏழு நாளுக்கு பிறகு
ஏழு காத தூரம் போய்
கிடைச்சது ஒரு கூலி
மூன்று நாலு நாள
பாட்டியும் இவனும் பட்டினி
வாங்கினது இரண்டு ரொட்டி
பசிக்கு இதுதான் கெட்டி.

பாட்டி... பாட்டி... நான்
‘செல்வ’நாதன் வந்திட்டன்
எழும்பன ரொட்டியிருக்கு
முத்து லட்சுமி பாட்டி இருந்த மூலைக்கு
முழு எட்டில் போய் நின்றான்
ஆசைப்பேரன் பாட்டியை
அணைத்து தூக்கி எடுக்க எண்ணி
குந்தி இருந்து கையை நீட்டி
பாட்டியின் தலையைத் தூக்க
தொங்கியது தலை
சில்லிட்ட உடலின்
சிரத்தை விடுத்து
கரத்தைத் தூக்கி
மணிக்கட்டை அவசரமாய்  
அழுத்திப் பார்த்தான்
ஆவி போய் இருந்தது.

அய்யோ பாட்டீ...
அலறி அழுதான்
தலை சுற்றியது
பசியால் இல்லை பாட்டி பிரிவால்
எதிரே அடுப்பில்
கரிய பூனையும்
கழுத்தை தொங்கப் போட்டிருந்தது
பாட்டி பிரிவால் இல்லை
பசியால் அதனாவியும் பிரிந்திருந்ததால்.


 வல்வையூரான்.

புதன், 20 ஜூன், 2012

இலட்சியக்கனவு


அகிலனும் குமுதனும் நண்பர்கள். குமுதன் சொந்த இடம் வவுனியா. அகிலனின் சொந்த இடம் கொடிகாமம். கடந்த இரண்டு வருடங்களாக அகிலன் தன் குடும்பத்தினருடன் வவுனியா சென்று வசித்து வருகிறான். 1996 இல் இடம் பெற்ற யாழ் இடப்பெயர்வுடன் கொடிகாமத்தில் இருந்து ஆறு வயது நிரம்பிய பையனாக வன்னிக்கு பெற்றோர்களுடன் இடம் பெயர்ந்திருந்தான்.

 அகிலன் வன்னியில் தருமபுரத்தில் இருந்து இப்போது வவுனியா! இலங்கைத் தமிழன் என்றாலே இடப்பெயர்வு குடிப்பெயர்வு என்பது சர்வசாதரனமான விடையமகிப்போனதே. சிறு வயதில் அகிலன் தருமபுரத்தில் பாலர் கல்வியை ஆரம்பித்தான். சிறு வயதிலேயே கல்வியில் அதிக நாட்டம் இருந்தது. கல்வியில் மட்டுமல்ல விளையாட்டுகளிலும் அதிக நாட்டம் தான். இந்த கல்வி விளையடுகளில் அவனை ஊக்கம் கொடுத்து அவன் வீட்டில் வெற்றி கோப்பைகளையும், சான்றிதழ்களையும் வாங்கி அடுக்குவதற்கு மூல காரணகர்தாவே அவன் தந்தை சிவகடாச்சம் தான். சிறு வயதிலேயே காலை 5. 00௦௦ மணிக்கு அவனை நித்திரையால் எழுப்புவர் அவர்.

     “அவன் சின்னப்பிள்ளை அவனை ஏன் இவ்வளவு வெள்ளன எழுப்புறியல் “

என்பாள் அவன் அம்மா மங்கை என்னும் மங்கையற்கரசி.

     “நீ சும்மா இரு இப்ப எழுப்பினால் தான் படிச்சுட்டு கொஞ்சம் எக்சசைசும் செய்யலாம்..... தம்பி..... அகில்..... அகில்..... எழும்பன..... அம்மா முட்டைகோப்பி வைச்சிருக்கா எழும்பி முகத்தை அலம்பிட்டு குடிங்கோ..... ராசா படிக்கோனுமல்லோ..... அப்பா சொல்றது கேக்குதோ.....”

அன்பாக மெதுவாக முட்டைக்கோபியை அடிப்பித்து வைத்து கொண்டு அவனை எழுப்புவார். எழும்புவதற்கு சோம்பலாக இருந்தாலும் அவரின் அன்புக்கு கட்டுப்பட்டு எழும்புவான் அகிலன். காலை கடன்களை முடித்து சுடச்சுட அவன் தாய் தரும் கோப்பியை ஒரே உறிஞ்சாக உறிஞ்சி விட்டு அவன் படிப்தற்கு வந்தமர காலை 5. 15 ஆகி இருக்கும். 6. ௦௦00 மணி வரை படிப்பான் குப்பி விளக்கின் ஒளியில். 6. 00௦௦ மணிக்கு சரியாக அவனது தந்தை மீண்டும் வந்து அவனை ஓடுவதற்கு அழைத்து செல்வார். அவன் வாசித்த கொட்டிலுக்கு முன்னால் இருந்த மணல் வீதியில் தந்தையும் மகனும் மெதுவாக ஓடுவர். ஓடி திரும்பியதும் அவனுக்கு சிறிது நேரம் உடற்ப்பயிற்சி சொல்லி கொடுப்பார் சிவகடாச்சம். இவை எல்லாம் முடிகின்ற போது நேரம் அனேகமாக ஏழை எட்டிகொண்டிருகும். ஓர் கால் மணி நேர இடைவேளையின் பின் தந்தையும் மகனும் குளிக்கச்செல்வர். அகிலனுக்கு அப்பாவுடன் குளிப்பது என்றால் கொள்ளை பிரியம். குளித்து வரவும் தாய் சுடச்சுட காலை சிற்றுண்டியை இருவருக்கும் பரிமாறுவார். காலையில் தாயின் முகத்தை பார்த்த படியே சாப்பாட்டை சாப்பிட்டு முடிப்பான் அகிலன். கலையில் தாயின் முகத்தில் தெய்வீக கலை தெரிவதாக அடிக்கடி கூறுவான் அகிலன். உண்மை தான் இவன் படிக்க ஆரம்பித்ததுமே தாய் சென்று குளித்து விட்டு சாமி படங்களுக்கு பூ கொய்து வந்து வைத்து விளக்கேற்றி விடுவாள். நெற்றி நிறைய விபூதியும் நடுவில் குங்குமப்பொட்டும் வைத்து இருக்கும் மங்கையை காலையில் யார் பார்த்தாலும்.... அவ்வளவு லஷ்மிகரமாக இருப்பாள் மங்கை.

அன்பான தாய் தந்தையால் வளர்க்கப்படும் எந்தக் குழந்தையின் மனமும் உடலும் எப்பொழுதும் உற்சாகமாகவே இருக்கும். அகிலனுக்கும் எந்த குறையுமில்லை. எனவே அவன் கல்வியிலும் விளையாட்டிலும் முதலிடத்தில் இருப்பது அதிசயம் இல்லையே! அத்தோடு அகிலன் வேறு ஒரு பிள்ளை சிவம் மங்கை தம்பதியினருக்கு. எனவே தாய் தந்தை அவனுக்கு கேட்டதெல்லாம்...... இல்லை இல்லை கேட்காமலே எல்லாம் செய்தனர். அதே போல் அவனும் அவர்கள் பெயரை மங்க விடாதே வாழ்ந்து வந்தான்.

வகுப்பில் முதலாம் பிள்ளையாக வந்தான். பாடசாலை மட்டம், வலய மட்டம், மாவட்ட மட்டம் என பல பரிசுகளை படிப்பிலும் விளையாட்டிலும் பெற்று வந்தான். எல்லாம் ஒரு குறித்த வயது வரைதான். அவனுக்கு பதினான்கு வயது நடக்கும் போது கடைக்குப்போன அவன் தந்தை அங்கு இராணுவத்தினரின் குண்டு வீச்சு விமானங்கள் நடாத்திய மிலேச்ச தனமான குண்டு வீச்சில் அகப்பட்டு மாண்டு போனார்.

அவனுக்கு”ஹீரோவாக” இருந்த அவன் தந்தையின் இழப்பு அவனை மிகவும் பாதித்தது. அவனை மட்டுமில்லை, அவன் தாயையும் பாதித்தது. அகிலனின் படிப்பு மெல்ல மெல்ல மங்கியது. ஆனால் விளையாட்டில் மட்டும் சிறிதளவு ஆர்வம் காட்டினான்.

காலச்சக்கரம் யாருக்காகவும் தான் சுழற்சியை நிறுத்தி வைப்பதிலையே! அது தொடர்ந்து சுழன்றது. அகிலன் தான் தாயுடன் பல இன்னல்களை அனுபவித்தான். நாட்டுச்சூழல் வேறு அவர்களை துரத்தியது. தொடர் இடப்பெயர்வுகள், பற்பல இழப்புகள்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் வவுனியா வந்து சேர்ந்தனர், அகிலும் அவனது தாய் மங்கையும். வவுனியா வந்து அங்கு தெரிந்தவர்கள் வீட்டில் இருந்து கொண்டு அகிலன் தான் படிப்பை தொடர்ந்தான்.

அவனுக்கு பள்ளியில் கிடைத்த தோழன் தான் குமுதன். குமுதனுக்கு விளையாட்டு என்றால் உயிர். அவன் பெரிதாக படிப்பில் ஒன்றும் சாதிக்கவில்லை, என்றாலும் விளையாட்டு போட்டிகளில் அவன் பெற்ற கோப்பைகள் எத்தனை, கேடையங்கள் எத்தனை, பதக்கங்கள் என்ன, சான்றிதல்கள் என்ன அப்பப்பா!!! புதிய பாடசாலையில் விளையாட்டின் சாம்பியனாக இருந்த குமுதனை கண்டவுடனேயே அகிலனுக்கு பிடித்துவிட்டது.

இருவருக்கும் பொது பொழுது போக்கு விளையாட்டு. இருவரும் பாடசாலை வெளியே ஒரே விளையாட்டு கழகத்திற்கு விளையாடுகின்றனர் கால்பந்து. கழகத்தின் பந்து காப்பாளனாக அகிலனும் முன்னிலை வீரனாக குமுதனும் விளையாடுகின்றனர். உயர் தர பரீட்சை முடிந்ததும் இருவரும் முழு முச்சாக விளையாட்டு பயிற்சியிலே காலம் கழித்தனர்.

ஒரு நாள் காலை முற்றத்தில் அமர்ந்து தாய்க்கு தான் முதல் நாள் விளையாடிய ஆட்டத்தை வர்ணனை செய்து கொண்டிருந்தான் குமுதன். அங்கே அப்பொழுது வந்த அகிலன்

     “என்ன மச்சான் அம்மாவுக்கு எதோ பிரசங்கம் செய்றாய்....”

கேட்ட படியே உள்ளே நுழைந்தான்.

     “இல்லடா நேற்றையான் மச்சப் பற்றி தான் சொல்லி கொண்டு இருக்குறேன். நீ என்ன திடீரெண்டு இந்த பக்கம் வந்திருக்க....?”

     “இல்லைடா எங்கட சொந்தக்காரர் ஊரில ஆரோ செத்திடினமாம். அம்மா ஊருக்கு போக வேணுமெண்டவா. நானும் சொந்த ஊர பார்த்தது இல்லை தானே? அங்க எங்கட வீடு இருக்காம்... இதோட ஒருக்க போய் பார்த்துட்டு வரலாம் எண்டுதான்... உன்னட்ட சொல்லாம போனால் நீ கத்துவாய்... அது தான்...”

     “என்ன யாழ்ப்பாணம் கொடிகாமத்துக்கு போறியோ! நானும் யாழ்ப்பாணம் பார்த்ததில்லை. நானும் உங்களோடு வரட்டே?...”
ஆர்வமாக கேட்டன் .குமுதன்

     “நீ வாரதப்பத்தி ஒண்டுமில்லை... உண்ட அம்மாட்ட நீ முதலில பெர்மிசன் எடுகோனும்....”

என்றவனை இடைமறித்தபடி வந்தாள் குமுதனின் தாய் கையில் அகிலனுக்கு தேனீரோடு

     “என்ன யாழ்ப்பாணத்துக்கு தானே? வடிவா போட்டு வாங்கோ... ஏன் அகில் உங்கட அம்மாவும் வாரா தானே... பிறகென்ன...”

என்று தன் சம்மதத்தை தந்தார் குமுதனின் தாய். நண்பர்களின் மகிழ்சிக்கு எல்லை கடந்தது.

உற்சாகமாக பயண ஏற்பாடுகளை செய்தனர். ஒரு வாரம் யாழில் தங்குவதற்கு முடிவு. அன்று மாலையே வவுனியாவில் இருந்து பஸ்ஸில் புறப்பட்டனர் அகிலனும், குமுதனும், மங்கையும்.
இரவு யாழ் சென்று சேர்ந்த அவர்கள், மறு நாள் மரண வீட்டிற்கு சென்றனர். அதற்கு அடுத்த நாள் கொடிகாமத்தில் அகிலன் குடும்பத்தினற்கு சொந்தமான தென்னக்கணியை பார்க்க சென்றனர்.

நீண்ட காலம் பராமரிக்க சரியானவர்கள் இல்லாததால் காணி சிதிலமடைந்து காணப்பட்டது. ஆனால் மரங்களுக்கு மட்டும் ஒற்றையடி பாதை காணப்பட்டது. யாரோ களவாக தேங்காய் பிடிங்கியவர்கள் அந்த பாதையை ஏற்படுத்தி இருக்க வேண்டும்.

நண்பர்கள் இருவரும் ஒருவர் மரத்தில் ஏறி இளநீர் பறித்து போட்டு இறங்கி வர இருவரும் ஆசை தீர இளநீர் பருகினர். பின்னர் இளநீர் கோம்பையினால் ஒருவருக்கொருவர் செல்லமாக துரத்தி அடித்தனர். 
அகிலன் அங்கிருந்த சிறிய பற்றைகளை பாய்ந்து கடந்து ஓட குமுதன் அவனை துரத்தினான்.

     “படார்....”

என பலமான ஓசை தொடர்ந்து,

     “ஐயோ அம்மா...”

அலறிய படி கிழே விழுந்தான் குமுதன். நீண்ட காலமாக மண்ணில் புதைந்து விழித்திருந்த ஓர் நிலக்கண்ணி தான் வேலையை காட்டி இருந்தது. குமுதனின் அலறல் கேட்டு ஓடி வந்தான் அமுதன். மீண்டும்
 
     “படார்...”

     “ஐயோ.... அம்மா.... ஐயோ....”

இப்பொது அகிலன், அந்த காணியில் இருந்த இன்னுமொரு கண்ணிவெடி தன் வேலையை காட்டி இருந்தது. விழுந்த அகிலன் கையில் ஓர் வெளிறிய மட்டை தட்டுப்பட்டது. எடுத்துப் பார்த்தான் அதில் ‘மிதி வெடி அபாயம்’ என காணப்பட்டது.

கால்பந்தில் தேசிய ரீதியில் பிரகாசிக்க வேண்டும் என்ற இலச்சிய கனவுடன் இருந்த இவர்களுக்கு கால்களே இல்லையே..... என்ன செய்வது இறைவா? 

 வல்வையூரான்





வியாழன், 17 மே, 2012

நம் கொடி அங்கே எப்போது பறக்கும்?



கொத்து கொத்தாய் தமிழர்கள்
கொன்று குவிக்கப்பட்டது இந்த மே 18
கொன்று குவித்தவன் இன்றும்
கோலோசுகின்றான் குதூகலமாய்

கொல்லப்பட்ட இனம் இன்றும்
கொண்ட வழி மறந்து மண்டியிட்டிருக்குது.

தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா என்றான்
தமிழ் கவி ஒருவன் அன்று.
தலை நிமிர்ந்த தலைகளை எல்லாம்
தாறுமாறாய் தறித்து தரையில் போட்ட
தமிழின அழிப்பு நாள் இந்த மே 18.

சின்னஞ் சிறுசுகளும் சிதறித்தான் போயின
சிங்களந்தான் சிதைத்து முடித்தோ இல்லை
சீக்கியரும் சீனரும் கூடத்தான் சேர்ந்து சிதைத்தனன்.
சிதைகூட மூட்ட முடியாமல்
சிறு குழி வெட்டி சில, பலதாய் போட்டு முடினோம்
சீறி வந்த சினத்தையும் குழிக்குள் போட்டு மூடியதும் இந்த மே 18.

மூடிய சினம் எப்போது முழிக்கும்?
மூதாதையர் ஆண்ட மண் எப்போது கிடைக்கும் ?
மாண்டவர் கனவு எப்போது பலிக்கும்?
மகிழ்ச்சி கடலில் நாம் எப்போது குளிப்போம்?
முத்தமிழ் மீண்டும் எப்போது சிரிக்கும்?
முழுதாய் நம் கொடி அங்கே எப்போது பறக்கும்?

வல்வையூரான்.

செவ்வாய், 24 ஏப்ரல், 2012

இவள் சுமங்கலியா?

சுவரில் இருந்த கடிகாரம் 'டாண்... டாண்...' பன்னிரண்டு முறை அடித்து ஓய்ந்தது. திடுக்கிட்டவளாக தன் நினைவுகளில் இருந்து மீண்டாள் சந்தியா. சாய்ந்திருந்த தூணில் இருந்து சற்று நிமிர்ந்தமர்ந்து பார்வையை சுற்றுமுற்றும் ஓடவிட்டாள்.



அவள் அருகில், அவளின் ஒரே மகனான ராஜு நன்கு அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தான். அடுத்த அறையில் இருந்து வரும் 'லொக்கு... லொக்கு...' இருமல் ஒலி அவள் தாயாரின் உடல் நிலையை ஊருக்குகே பறைசாற்றியது. எதிரே கண்ணாடி பிரேமினுள் இருந்து அவளது அப்பா அவளை தன் சோடப்புட்டி கண்ணாடியோடு பார்த்து சிரித்தார்.

" ம்..." 

நீண்ட பெருமூச்சு அவளிடம் இருந்து வந்தது.

'அப்பா செத்து ஐந்து வருடமாச்சு' 

தனக்குள் நினைத்துக் கொண்டாள். அவள் நினைவுகளில் மீண்டும் புதைந்துகொண்டாள் அவளை அறியாமலேயே.....
அவளுக்கு நன்றாக ஞாபகம் இருந்தது. O/L எழுதி A/L படிக்க ஆரம்பித்த கொஞ்ச நாள். அவள் பாடசாலையிலிருந்து வீட்டுக்கு வந்து பார்க்கிறாள், வீடு பரபரப்பாக காணப்படுகிறது. இவளுக்கு மூத்தவள் சர்மிளாவும், அவள் தாயாரும் அடுப்படியில் ஏதோ வேலையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். வீட்டு ஹோலில் சில விட்டு சாமான்கள் தங்கள் தங்கள் மூட்டைகளில் இருந்து இவளை எட்டி பார்த்தன. இவள் பின்னால் வந்த இவள் அப்பா 

" சந்தியா கெதியா சாப்பிட்டுட்டு வெளிகிட்டு வந்து உண்ட சாமான்கள் எதாவது விடுபட்டிருக்கோ எண்டு பார்" 

என்றார். ஏதும் புரியாமல் பின் பக்கம் திரும்பி அப்பாவை பார்த்தாள். 

" ஓம் பிள்ளை இங்க இனி இருக்கேலாது. ஆமிக்காரங்கள் வெளிக்கிட்டு வாரங்களாம். நாங்களும் வன்னிக்கு போகவேணும்... " 


" கெதியா சாப்பிட்டுட்டு குசினியில வந்து ஒரு கை தா பாப்பம்.." 

அடுப்படியில் இருந்து அம்மாவின் குரல் ஒலித்தது.
எடுத்தது பாதி எடுக்காதது பாதி என்று வன்னிக்கு பயணம் வெளிக்கிட்டு, வந்து கிளிநொச்சியில ஒரு தெரிஞ்சாக்கள் காணியில ஒரு கொட்டில் வீடு போட்டு இருந்தது வரை..... அவள் மனத் திரையில் ஓட விட்ட CD படம் மாதிரி வந்து போனது. 
கிளிநொச்சிக்கு வந்து கிளிநொச்சி மகா வித்தியாலயத்தியில் சேர்ந்து படிப்பை தொடர்ந்தாள். பள்ளிக்கூடம் போகையிலும் வருகையிலும் வீட்டுக்கு பக்கத்தில் இருந்த மோட்டார் சைக்கிள் கராச்சில நிற்கிற சந்திரன் இவளை பாக்கிறதை முதல்ல பெரிசா கணக்கில எடுக்காதவள், நாளாக நாளாக அவள் மனம் அவனை தேடுவதை அவளால் தடுக்க முடியவில்லை. 
சந்திரனும் சந்தியாவும் கண்களின் சந்திப்பில் இருந்து முன்னேறி 'ஸ்பெசல் கிளாஸ்' எண்டு அம்மாவுக்கு பொய் சொல்லி சந்திரனோட புளிய மரத்தடியில இருந்து கதைகிறது வரை வந்தாச்சு.
அப்பாவுக்கு எப்படியோ விஷயம் எட்டி அப்பா ருத்திர தாண்டவம் ஆடி அடங்கி ஒரு வழியாக சந்திரனை கை பிடிச்சாச்சு. சந்திரனும் சும்மா இல்ல. கராச்சில வேல செய்யிறவன் என்ட நிலை மாறி இப்ப சொந்த கராச்சுக்கு முதலாளி எண்டநிலைக்கு முன்னேறி இருக்கான்.
சந்திரன் மிக விரைவிலேயே மாமனார் மாமியாருக்கு பிடித்த மருமகன் என்ற பெயரை பெற்றுவிட்டான். நல்ல உழைப்பாளி. குடி வெறி என்று எந்த கெட்ட பழக்கமும் அவனுக்கு இருக்கவில்லை. சந்தியாவை உள்ளங்கையில் வைத்து தாங்கினான். வேறு என்ன வேண்டும் அவள் அப்பாவுக்கும் அம்மாவுக்கும்? அப்பா இப்பெல்லாம் பல முறை அவளிடம் கூறுகின்றார்,

" நான் இல்லாட்டிலும் பரவால்ல பிள்ள. மருமகன் இந்த குடும்பத்த வடிவா பாப்பார். எனக்கு ஆம்பிள பிள்ள இல்லாத குறை தீர்ந்துது பிள்ளை."

சந்திரன் தன் உழைப்பில் சொந்தமாக ஒரு காணி வாங்கி இப்ப அதிலேயே குடியேறியாயிற்று. இடையில் அக்கா சர்மிளா நாட்டுக்காக தன்னை ஒப்படைத்திருந்தாள். அக்கா போராடப் போனதில் சிறிய வருத்தம் தாய் தந்தையருக்கு இருந்தாலும் நாட்டுக்கு தாங்களும் பங்களிப்பு செய்திருக்கிறம் என்ற நிம்மதி இருந்தது. அதோடு சந்தியாவுக்கு ஒரு குட்டி சந்திரனோ, சந்தியாவோ வர இருக்கிறது என்ற செய்தியும் நிம்மதிக்கு ஒரு காரணம்.
யுத்தம் தன் கோர முகத்தை பலமுறை தமிழர்கள் மேல் காட்டி இருந்தாலும், இந்த முறை சற்று அதிக அகோரத்துடன் காட்ட ஆரம்பித்தது. சந்தியா குடும்பம் மட்டும் என்ன விதிவிலக்கா? மீண்டும் இடப்பெயர்வு. அனால் இம்முறை மூட்டை முடிச்சுகள் கட்ட காலம் இடம் கொடுக்கவில்லை. விசுவமடுவிக்கு சென்று தங்கி இருக்க, இந்த சந்தோஷ குடும்பத்துக்கு முதல் இடி விழுந்தது.
ஆம்! சர்மிளா புலிக்கொடி போர்த்த பெட்டியில் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டாள். குடும்பமே கதறி அழுதது. மிக விரைவிலேயே அவள் வித்துடல் விசுவமடு துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்டது. துக்கத்தை கொண்டாடக் கூட காலம் இடம் கொடுக்கவில்லை. மீண்டும் புதுக்குடியிருப்புக்கு இடம் பெயர்வு.

'பட்ட காலிலேயே படும், கெட்ட குடியே கெடும்' என்று முன்னவர்கள் சொன்னது உண்மைதான் என்பது போல வந்து விழுந்தன எறிகணைகள்.


" ஐயோ அம்மா..."

என்ற கூக்குரலின் மத்தியில் புகை மூட்டம் ஓய்ந்ததும் தலையை நிமிர்த்தி பார்த்தாள் சந்தியா. எதிரே இரத்த வெள்ளத்தில் அவள் அப்பா. கண்ணோரம் கண்ணீர் வழிவது போல் ஓர் உணர்வு. தொட்டுப் பார்த்தால். பிசுபிசுப்பாக உணர்ந்தாள். கையை சடாரென எடுத்துப் பார்த்தாள். அது அவள் அப்பாவின் இரத்தம். சதைத் துண்டுகள் சிதறி இருக்க குடல் வெளியே தள்ளிய நிலையில் கண்களைத் திறந்து அவள் இருந்த பக்கம் பார்த்த படியே இறந்திருந்தார் அவள் அப்பா. சற்று தள்ளி.... யார் அது... ஒரே புழுதியின் நடுவில்...

"ஐயோ அவரல்லோ... ஆராவது வாங்கோவன்...ஐயோ.... அவற்ற வலது கால் பாதத்த காணேல்ல... ஆராவது இருக்கியலோ? வாங்கோவன்..."

கண்கள் இருண்டு வந்தது. காதுக்குள் இரைச்சல் மட்டும் கேட்டது.
கண் விழித்துப் பார்த்த போது அவள் அப்பா அடக்கம் செய்யப்பட்டு இருந்தார். அவள் கணவன் தற்காலிக மருத்துவமனையில் கால் அகற்றப்பட்ட நிலையில் இருந்தான்.
மீண்டும் இடப்பெயர்வு. அவள் அம்மாவிடமும் அவளிடமும் சந்திரனை தூக்கிகொண்டு இடம் பெயர மனதிலும் உடலிலும் சக்தி இல்லை. அங்கேயே தங்கினர்.

'வெற்றி வாகை(?) சூடி' வந்த இராணுவம் இவர்களைப் பிடித்து வவுனியா அனுப்பியது. அவள் கணவன் மேலதிக சிகிச்சைக்கு என அனுராதபுரத்துக்கு அனுப்பப்பட்டான். 

அவளுக்கு பக்கத்தில் படுத்திருக்கும் அவள் மகன் ராஜு உதைத்ததில் தன் நினைவு அறுபட மீண்டாள் நிகழ்காலத்திற்கு.
மகனை தடவிக் கொடுத்தாள். தட்டி விட்டுக்கொண்டே தூங்கினான் அவன். அப்படியே உரித்து வைத்தது போல் அவன் தன் அப்பாவின் சாயலைக் கொண்டு வந்திருந்தான். படுக்கும் போது அவன் கேட்டது இப்பவும் அவள் காதில் எதிரொலித்தது. 

" அம்மா எண்ட அப்பா எப்ப வருவார்? அவர் ஏன் என்னை பாக்கேல்ல? அவருக்கு என்னை பிடிக்கிறதோ? நேசரில எல்லாரும் அவையட அப்பவ பத்தி சொல்லுறாங்கள்... எனக்கு எண்ட அப்பாவை தெரியாதே... அம்மா... சொல்லுங்கோ...."


" நீ படு தம்பி.... உண்ட அப்பாவும் வருவார்..."

ஏதேதோ சொல்லி படுக்க வைத்தால் ராஜுவை. 'அனுராதபுரம் என்று ஏற்றப்பட்டவர் இப்ப எந்த புரத்தில் இருக்கிறார் என்று எந்த கடவுளுக்கு தெரியுமோ தெரியல்ல...'
எதோ பொட்டு வைத்துக்கொண்டு பிழைப்புக்கு இடியப்பம் அவித்து விற்கும் இவளுக்கு தெரியவில்லை, தான் பொட்டு பூ வைக்ககூடிய சுமங்கலியா.... இல்லையா என்று......?!?!?!?!

வல்வையூரான்.