புதன், 17 அக்டோபர், 2012

தித்திக்கும் வெளிநாடு


காலையில் எழுந்தேன் நேரம்
காட்டியது  ஆறு பதினைந்து
காலைக் கருமங்க ளாற்றினேன்
கன கதி வேகமாக.



குளிரும் தண்ணீர் மாற்றி
கூதலைப் போக்க சுடுநீராக்கி
குளித்தேன் குறுகிய நேரத்தில்
கும்பிட்டேன் சாமியை குறியுமிட்டேன்.


ஆகியது நேரமேழு அலுப்புதான்
ஆனாலும் அவசரமாய் ஓடி
ஆடிவந்து நின்ற பேரூந்தேறி
ஆசையாய் குட்டி தூக்கம் அங்கேயும் போட்டேன்.

பதினைந்து நிமிடத்தில் பஸ் அங்கு நிற்கையில்
பாய்ந்து இறங்கி படிகளும் ஓடி
பறக்க தயாராய் நின்ற இரயில் ஏறி
பாதுகாப்பாய் ஓர் இருக்கை இருந்தேன்.

இருக்குது இன்னும் நாற்பத்தைந்து நிமிடம்
இனிதாய் இன்னுமொரு குட்டிதூக்கம்
இப்படி எண்ணி நான் இமைமூட நினைக்கையிலே
இருக்குமிடமருகே வந்தாள் இருமியபடி வெள்ளைப்பாட்டி.

வெள்ளைப் பாட்டி வந்ததாலே
வெருட்டப் பட்டது என் தூக்கம்
வேகமாய் எழுந்தேன் விலகித்தான் நின்றேன்
வெள்ளைப் பாட்டி உரைத்தாள் 'தாங்யூ மை டியர் சண்'.

ஆச்சுது நின்ற நிலை அடைந்த இரயிலினுள்ளே
அசையவும் இடமில்லை ஆயாசம் மிகுந்தவனாகி,
அலுப்போடு நின்றிருந்த இரயிலில் இருந்திறங்கி
அதிரடியாய் படியேறி அடைந்தேன் அடுத்த பஸ்.

இப்படித்தான் தினமும் நாங்கள் வேலைக்கு
இடிபட்டு  நெரிபட்டு இற்றுப்போய் நொந்துபோய்
இதமற்ற குளிரில இங்கு வந்து
ஈரேழு மணிநேரம் வேலை செய்து

சருகாகி மக்கி சாணியாய்  மிதிபட்டு
சாயந்தரதுக்கு மேல சின்னதா சாப்பிட்டு
சந்தோசம் எண்டத சத்தியமா மறந்து
சலிப்போடும் அலுப்போடும் வேலைய முடிச்சு,


அடுத்த நாள் ஆரம்பிக்க அரைமணி என்றிருக்க
அதே ஓட்டமாய் பஸ்சேறி  இரயிலேறி
அங்கே கொஞ்சத் தூக்கம் இங்கே கொஞ்சத் தூக்கம்
அப்படியே வீடு சேர ஆயிடும் மணி அதிகாலை ரெண்டு

திருப்பி ஒரு நாலு மணி நேர நித்திரை
திக்கு வெளிக்க முதல் மீண்டும் பழையவோட்டம்
திங்கள் முதல் ஞாயிறு வரை திருப்பித் திருப்பி இதுதான்
தித்திக்கும் வெளிநாடு - திகைக்குது தூக்கம், வாரன்....


 வல்வையூரான்.