சனி, 29 டிசம்பர், 2012

வரப்புயர்ந்தும் வாழ்வுயராமல்


மழை பெய்தது 
வயல் நிறைந்தது
உயர்த்தி கட்டிய வரப்பில்
நிறைந்து வந்தது வெள்ளம்
நிறைந்ததால் நிமிர்ந்தது 
நிறை குலை தள்ளிய 
நிறைந்த நெற்கதிர்
விளைந்தது விண்ணுயர்ந்து
விளைவித்தவன் விவசாயி

உழுது மறுத்துளுது
உயர் விதை தேடி
உண்மை உழைப்பை 
குருதியை உருக்கி
வியர்வையாய் கொட்டி
வான் பார்த்த பூமியில்
தான் பார்த்து ஆய்ந்து
நாற்று நடவு நட்டு
அங்கெ இங்கே 
கடன வாங்கி

அதிகமும் இல்லாமல் 
குறைச்சலும் இல்லாமல்
அளவாய் வரப்பு வெட்டி 

அன்பான குழந்தைக்கு 
பால் புகட்டுவது போல்
நன்றாய் நீர் விட்டு

அந்த மருந்து
இந்த உரம் என்று
இன்னும் கடன் வாங்கி
உழைப்பை போட்டு குழைத்து
உயர்த்திய நெற்கதிர் இது

விளைந்த நெற்கதிரை
விரைந்து அறுத்து
போரடுக்கி சூடடித்து
சாக்குகோனி விலைக்கு வாங்கி
சம்பளம் குடுத்து 
சாக்கு தைத்து எடுத்து
விற்பனைக்கு போனால்
விலை அங்கே கிடைக்காது

விற்றுவிடவே வேண்டும்
விவசாயிக்கு கடன்
தொண்டை அடைக்க நிக்குது
விற்றபின் வீடு திரும்பமுன்
வேண்டியது எல்லாம் 
வாங்க முடியாமல்
வேண்டிய கடனை மட்டும்
வினயமாய் அடைத்து
வீடு சேர்கையில் வீட்டில்
நித்திய பிலாக்கணம் தான்

வரப்புயர்ந்தும் வாழ்வுயராமல்
வேதனையோடு விவசாயி.


வல்வையூரான்.