செவ்வாய், 29 ஜனவரி, 2013

ஹைக்கூக்கள் 7








மலர்களும் வெட்கி தலைகுனிந்தன
அவை கண்டது
உந்தன் மலர்முகம்.





தனிமையில் முழுநிலவும் தகிக்கிறது
திருடிப்போனாய் 
தண்மையெல்லாம்.




நேற்றுப்போலவே இன்றும் இனிக்கிறது
உன் நினைவுகள்
காதல்.




அவள் திறந்து பார்த்தது
கடிதமல்ல 
என் இதயம்.




தூங்கும் போதும் 
விழித்தே இருந்தது
இடம்மாறிய மனசு.



முட்கள் குத்திய போதும்
வலிக்கவில்லை - அது
காதல்.

வல்வையூரான்.


ஞாயிறு, 13 ஜனவரி, 2013

பொங்கலோ பொங்கல்...


நாங்கள் பொங்குவோம்
பொங்கலோ பொங்கல்...
பொங்கலோ பொங்கல்...

கல்லு மூண்டு வச்ச அடுப்பில
கனதியான புது மண் பானை வச்சு
முக்குறிகளை  முழுசா அதற்கு வச்சு
பக்கத்தில கட்டோட கரும்பு வச்சு

புது நெல்லு மணி விளக்கி
பசும்பாலும் நெய்யும் மனமா விட்டு
பக்குவமா சக்கரை கலந்து
பதமாக வெந்து வர
முந்திரி வத்தலும் முந்திரிப்பருப்பும்
ஏலத்தூளும் தூவி
பொங்கல் பொங்கி வர
வெடி சுட்டு
பொங்கலோ பொங்கல் எண்டு
பாட்டி குலவையிட
பக்கத்துக்கு வீட்டிலும்
முன் வீட்டிலும் கூட
வெடியோசை வானைப் பிளத்தது
பொங்கலோ பொங்கல்...
பொங்கலோ பொங்கல்...

இது
முன்பொரு காலம்.


ஆனால் இப்ப

முன் வீட்டு குடும்பம் இன்னும்
முகாம்ல இருந்து வரயில்ல
முள்ளு கம்பிக்குள்ள
முழுசா அடைபட்டு இருக்கினம்

ஆனாலும் எங்களுக்கென்ன
நாங்கள் பொங்குவோம்
பொங்கலோ பொங்கல்...
பொங்கலோ பொங்கல்...

பக்கத்துக்கு விட்டில இருந்த
பரமசிவத்தார்ட பெடியன்
வன்னில இருந்து வரயிக்கை
வழியில காணாமல் போனவன்
இன்னும் வீடு வரயில்ல


ஆனாலும் எங்களுக்கென்ன
நாங்கள் பொங்குவோம்
பொங்கலோ பொங்கல்...
பொங்கலோ பொங்கல்...


விதானையார் வினாசித்தம்பி வீட்டில
ரெண்டு நாள் முன்னால
விறுக்கேண்டு வந்த
வெள்ளை வானால வில்லங்கம் ...
விதானையார்ட மனிசி அழுதா...


ஆனாலும் எங்களுக்கென்ன
நாங்கள் பொங்குவோம்
பொங்கலோ பொங்கல்...
பொங்கலோ பொங்கல்...

தெரு முனையில
இருக்கிற சின்னையா விட்டில
படிக்க எண்டு
பல்கலைக்கழகம் போன
பரந்தாமன் திரும்பி வார வழியில
படக்கெண்டு மறிச்சவங்கள்...
பிடிச்சு போனவங்கள்...
இன்னும் விடயில்ல


ஆனாலும் எங்களுக்கென்ன
நாங்கள் பொங்குவோம்
பொங்கலோ பொங்கல்...
பொங்கலோ பொங்கல்...

இப்படி தினமும் 
எத்தனையோ நடக்குது
இங்கேயும் அங்கேயும் நடக்குது
இரவும் பகலும் நடக்குது  

ஆனாலும் எங்களுக்கென்ன
நாங்கள் பொங்குவோம்
பொங்கலோ பொங்கல்...
பொங்கலோ பொங்கல்...

வல்வையூரான்.

வியாழன், 10 ஜனவரி, 2013

ஹைக்கூக்கள் 6




விளக்குகளும் மங்கிபோகும்
விந்தை விடியல்
காதல்





தினமும் கிழிக்கப்படுவது
கடதாசிகள் அல்ல
உன் ஆயுள்


விழி அம்பெறிகையில்
விபத்துக்குள்ளானது
விழுந்தவன் இதயம்



மயங்கியது மனது
மகிழ்ச்சியில்
இசை.


பலமான ஆயுதம் தான் பெண்களிடம்
ஆண்களுக்கேதிராய்
மௌனம்.


கடலலை எழுந்து எட்டாண்டு
இன்றும் கடல்வெள்ளம்
கண்களில் ஆழிப்பேரலை.


பொங்கி எழுந்ததால்
மங்கியது வாழ்வு
சுனாமி.


தடக்கி விழுகையில் பிடிப்பதும்
தள்ளி விடுவதும்
நட்பே.


வீடுகளில் செக்கலென்றால் அழுகை
விருந்தேதும் தெரிவதில்லை கண்ணில்
விசித்திரம் - தொலைக்காட்சி நாடகங்கள்.

வல்வையூரான் .