செவ்வாய், 25 செப்டம்பர், 2012

தேடல்.

தேடல்கள் நீண்டாலும்
தீர்க்கமாய் முடிவெடுத்து
தேடு பொருளை சரியாய் தெரிந்து 
திசைதனையும் ஆய்ந்து

தேடலை மேற்கொண்டால்
திருப்திதான் திருப்பதி 
தேடுபொருள் கிடைக்கும்
திடமாகத் தான் நம்பு

தொலைத்தவை நிறையத்தான் தமிழன்
தேடத்தான் வேண்டும் தேடு
தொலைத்தது ஒன்றும் தொலைவிலில்லை
தேடத்தான் வேண்டும் தேடு

ஒற்றை காலில் நிற்கும் கொக்கு கூட
தேடித்தான் நிற்கிறது 
ஒற்றுமையாய் தேடிப்பார் 
தேடுபொருள் நிச்சயம் கிடைக்கும்
வல்வையூரான் 

ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

பட்டினி



ஒற்றையடிப் பாதை
கன்னங் கரிய இருட்டு
சில் வண்டின் ரீங்காரம்
உடலை சிலிர்க்க வைக்கும் குளிர்
தூரத்தில் கோட்டானின் கதறல்
பக்கத்தில் இருந்த பதிந்த 
மரக்கிளையில் தொங்கி
விழிகளை உருட்டிய வௌவால்
எதிரே தெரிந்த நிமிர்ந்த மரம் தந்த
ஏகாந்தப் பேயை ஏற்றிடும் தோற்றம்
எதையும் இவன்
இலட்சியம் செய்யவில்லை
இலட்சியம் எல்லாம்
எதிரே தூரத்தில்
ஏதிலியாய் நின்ற ஒற்றைக் குடிசை.

இன்றோ நாளையோ இடிந்து விழுவேன்
என்றே சொல்லிய குடிசை மண் மதில்
அந்த சுவரில் ஊதுபத்தி சூட்டில்
எரிந்தும் எரியாததுமான மங்கலான
கலண்டர் முருகன் படம்
விடிந்தால் சூரியன்
விழுந்தடித்து உள்ளே வரும்
வித்தியாசமான ஓலைக் கூரை
மூலையில் கிடந்த
முழுசாய் கிழிந்த ஓலைப் பாயில்
முழங்கால் முகத்துக்கு நேரே நீட்டி
முழுவட்டமாய் முடங்கியிருந்தாள்
முத்து‘லட்சுமி எனும் முதியபாட்டி.

திறந்து கிடந்தது பலகைக் கதவு
பூட்டப்படாமல் இல்லை
பூட்டே இல்லாமல்
உள்ளே இருள் கவிந்து கிடந்தது
ஏற்றப்பட்ட குப்பி விளக்கு
எண்ணை இல்லாது போனதால்
காற்றில் அது கலந்திருந்தது
கருகிய திரி புகையை
அடுப்பில் படுத்திருந்த கருப்பு பூனை
ஆ... என கொட்டாவி விட்டு
மீண்டும் சோம்பலோடு
சாம்பலுக்குள் முடங்கிக் கொண்டது
இரண்டு கப்புகளுக் கிடையில்
கட்டியிருந்த கொடிக்கயிறு
இற்றுப் போனதால்
படாரென அறுந்துபோனது
பரவிக் கிடந்தன பழைய
கிழிந்த புடவைகளும் சாரங்களும்.

அவனுக்குள்ளும் பசிதான்
ஆனாலும் அவன் முன்
அவன் ஆசைப் பாட்டி
ஆச்சுது இன்று மூன்றாம் நாள்
பட்டினியைப் பலமுறை
பார்த்தவர்கள் இவர்கள்
பழகிப் போனது தான் என்றாலும்
பசிக்கிறது என்செய்ய
கொஞ்சம் படிச்சவர் தான் இவர்
கெஞ்சிக் கேட்டும் இவனுக்கு
வேலை ஏனோ கிடைக்கவில்லை
மாரி பொய்த்ததால்
வயலும் இல்லை வாழ்வும் இல்லை
கூலி வேலைக்கு போகலாம் என்றால்
குடிசைகளின் நடுவில் கூலி ஏது
பசிக்குது என்று கையேந்த
பாவி மனம் ஒப்பவில்லை
வசிக்கின்ற வீடும் திருத்தி
வளமாக்க வேண்டும்
புசிக்க நல்லதாய் இருவர்க்கும்
போசனம் வேண்டும்
பாட்டிக்கு ஒரு நல்ல சேலை
வீட்டிற்கு ஒரு நல்ல கூரை
கேட்டது ஒரு வேலை அது இல்லை
போட்டதும் ஒரு வேசமில்லை

ஏழு நாளுக்கு பிறகு
ஏழு காத தூரம் போய்
கிடைச்சது ஒரு கூலி
மூன்று நாலு நாள
பாட்டியும் இவனும் பட்டினி
வாங்கினது இரண்டு ரொட்டி
பசிக்கு இதுதான் கெட்டி.

பாட்டி... பாட்டி... நான்
‘செல்வநாதன் வந்திட்டன்
எழும்பன ரொட்டியிருக்கு
முத்து லட்சுமி பாட்டி இருந்த மூலைக்கு
முழு எட்டில் போய் நின்றான்
ஆசைப்பேரன் பாட்டியை
அணைத்து தூக்கி எடுக்க எண்ணி
குந்தி இருந்து கையை நீட்டி
பாட்டியின் தலையைத் தூக்க
தொங்கியது தலை
சில்லிட்ட உடலின்
சிரத்தை விடுத்து
கரத்தைத் தூக்கி
மணிக்கட்டை அவசரமாய்  
அழுத்திப் பார்த்தான்
ஆவி போய் இருந்தது.

அய்யோ பாட்டீ...
அலறி அழுதான்
தலை சுற்றியது
பசியால் இல்லை பாட்டி பிரிவால்
எதிரே அடுப்பில்
கரிய பூனையும்
கழுத்தை தொங்கப் போட்டிருந்தது
பாட்டி பிரிவால் இல்லை
பசியால் அதனாவியும் பிரிந்திருந்ததால்.


 வல்வையூரான்.